top of page

சுவாமி ரமணகிரி அவர்கள் 1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி ஸ்வீடன் நாட்டில் பிறந்தார்கள். அவருடைய இயற்பெயர் பெர் அலெக்சாண்டர் வெஸ்டின். அவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, ஒருநாள் தன்னுடைய வீட்டின் இரண்டாவது மாடிக் கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்து மூர்ச்சையடைந்தார்கள். அவருடைய தாயாரும் சகோதரிகளும் பதற்றத்துடன் ஓடி வந்து தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினார்கள். அதற்கு சிறுவனான சுவாமி, “ஒரு பெரிய பறவை வந்து என்னைத் தாங்கி கீழே இறக்கி வைத்துவிட்டு சென்றது” என்று கூறினார். அந்த அனுபவத்தை அவர் தெய்வீக அருளாக உணர்ந்தார்.
சிறுவயதிலிருந்தே அவருடைய உள்ளத்தில் ஒரு ஆன்மீகத் தேடல் இயல்பாகவே இருந்தது. காசியில் கல்வி (Banaras Hindu University - M.A. Philosophy) பயின்ற காலத்தில், மாலை நேரங்களில் கங்கை, காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் அங்கிருந்த துறவிகளை சந்தித்து அவர்களுடைய ஆசியைப் பெற்றும், ஆன்மீக உரையாடல்களில் ஈடுபட்டும் வந்தார்.
விடுமுறை காலங்களில் இமயமலைப் பகுதிகளுக்கும், குறிப்பாக அல்மோரா (Almora) சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் தனது இந்திய நண்பர்களுடன் பயணம் செய்தார்கள். அத்தகைய ஒரு பயணத்தின்போது, அவரது நண்பர்கள் அவரை மஹா அவதார் பாபாஜி தவம் செய்த ஒரு குகைக்கு அழைத்துச் சென்றார்கள். நண்பர்கள் குகைக்குள் அமர்ந்து தியானம் செய்வதைப் பார்த்து, அவர்களுடன் அமைதியாகக் கண்களை மூடி அமர்ந்தார். அப்போது ஒரு ஆழமான ஒளி அனுபவம் ஏற்பட்டதாகவும், பேரொளி தனது வலது காலின் வழியாக உடலுக்குள் நுழைந்து, முதுகுத்தண்டின் வழியாக மேலே சென்று சஹஸ்ராரத்தை அடைந்தது போலவும், பின்னர் தனது உடல் முழுவதும் ஒளியாக மாறியதுபோலவும் அனுபவித்தார்கள். சுவாமி ரமணகிரி அவர்கள் ஆன்மீகப் பயணத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதினார்கள்.
அடுத்த விடுமுறையில் நண்பர்களுடன் கல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்குச் சென்றபோது, மதுரையில் ஜீவ சமாதி அடைந்த ஸ்வாமி குழந்தையானந்தா மகானின் சீடராக இருந்த சிவசங்கரி மாதாஜி அவர்களின் ஆசிரமத்திற்குச் செல்லும் வாய்ப்பு சுவாமிகளுக்கு கிடைத்தது. அவரிடம் “நீ ராஜயோகம் கற்றுக்கொள்ள விரும்புகிறாயா?” என்று சிவசங்கரி மாதாஜி கேட்டதால், மிகுந்த மகிழ்ச்சியுடன் சிவசங்கரி மாதாஜியைத் தனது இரண்டாவது குருவாக ஏற்றுக்கொண்டு, அவரிடம் ராஜயோகப் பயிற்சியைத் தொடங்கினார்கள்.
அந்த அடுத்த கட்டமாக, சந்நியாச வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆழமான விருப்பம் அவருக்குள் உருவானது. ஆதி சங்கராச்சாரியார் வழிவந்த தசநாமி சம்பிரதாயத்தின் கீழ் சுவாமி ரமணகிரி அவர்கள் சந்நியாச தீட்சையை ஏற்றுக்கொண்டார். தசநாமி மரபில் வழங்கப்படும் பத்து பெயர் மரபுகளில் “கிரி” (ஹனுமந்த கிரி) என்ற பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. ஞானத் தேடலுக்கு தெற்கே செல்ல வேண்டும் என்று அவருக்கு கூறப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில் தென்னாட்டில் வாழ்ந்த இரு மகான்கள் சுவாமியவர்களின் கவனத்தை ஈர்த்தனர்:
ஸ்ரீ அரவிந்த மகரிஷி — ஆழ்ந்த ஆன்மீக ஞானத்துடன், ஆங்கிலக் கல்வியிலும் புலமை பெற்றவர்;
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி — திருவண்ணாமலையில் வாழ்ந்த ஞானி;
“நீங்கள் முதலில் திருவண்ணாமலை சென்று பகவான் ரமண மகரிஷியை தரிசித்துவிட்டு, பின்னர் அரவிந்த மகரிஷியைச் சந்தியுங்கள்” என்று ஒரு இஸ்லாமிய அன்பர் அறிவுறுத்தினார்.
சுவாமி ரமணகிரி அவர்கள் திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்கள் தங்கியிருந்த ஆசிரமத்திற்குச் சென்றார்கள். அப்போது பகவான், அருகிலிருந்த தொண்டரை அழைத்து, “வெள்ளைக்கார சுவாமி வந்திருக்கிறார்; அவர் தங்குவதற்கு மூன்று நாட்கள் இடம் கொடு” என்று கூறினார். மூன்றாவது நாள் இரவு — மகாசிவராத்திரி இரவு சுவாமியவர்கள் தவம் கொண்டிருந்தபோது, மஹா அவதார் பாபாஜியின் குகையில் முன்பு ஏற்பட்டிருந்ததைப் போன்ற ஒரு அற்புதமான ஒளி அனுபவம் மீண்டும் ஏற்பட்டது.
சிவராத்திரி முடிந்த பின்னர், சுவாமியவர்கள் பகவானின் அருகிலேயே தங்கி, அவருடைய சீடராக இருந்து தொடர்ந்து சாதனை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். பகவான் தேங்காய் ஓட்டினால் செய்யப்பட்ட ஒரு எளிய பிக்ஷாபாத்திரத்தை தயார் செய்து அந்தப் பாத்திரத்தை சுவாமியவர்களிடம் கொடுத்து, “நீ தனியாகச் சென்று ஆசிரமம் அமைத்து, உன்னுடைய ஆன்மீகப் பயிற்சியைத் தொடரு; உன்னால் இயன்ற சமூகப் பணியையும் தொடரு” என்று அருளாசி வழங்கி அனுப்பினார்.
அந்தக் காலகட்டத்தில், சுவாமியவர்களின் நண்பர் ஒருவர் திருமணத்திற்காக மதுரை செல்ல வேண்டியிருந்தது. அவருடன் சுவாமி ரமணகிரி அவர்களும் மதுரைக்கு வந்தார்கள். அந்தத் திருமணத்திற்கு வந்திருந்த திரு. பாலசுப்பையா அவர்கள் சுவாமியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டார். சுமார் பத்து ஆண்டுகள் மூத்தவரான பாலசுப்பையா, சுவாமியவர்களை முதன்முதலில் பார்த்தவுடனேயே, “இவர் எனக்கு உடன்பிறந்த சகோதரரைப் போன்றவர்” என்ற ஆழமான உணர்வு ஏற்பட்டதாகக் கூறினார். அதன்பின்னர் சுவாமியவர்கள் பாலசுப்பையா அவர்களின் இல்லத்திலேயே தங்கத் தொடங்கினார்கள்.
ஒருநாள் சிறுமலைப் பகுதியில் உள்ள அருவியில் நீராடிவிட்டு, இருவரும் நடந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அங்கு ஆசிரமம் அமைக்க ஏற்ற இடம் கிடைக்குமா என்று தேடினர். அப்போது ஒரு அரசமரத்தின் அருகில் சுவாமி ரமணகிரி அவர்கள் நடந்துகொண்டிருந்தபோது, தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் முன்பாக, பகவான் ரமண மகரிஷியின் பாதச்சுவடுகள் தென்பட்டதாக சுவாமியவர்கள் உணர்ந்தார்கள்.
அந்தக் கணமே சுவாமியவர்கள் பாலசுப்பையாவை அழைத்து:
“பாலு… என்னுடைய குருநாதர் இந்த இடத்தை வாங்குவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார். இந்த இடத்தைக் கேட்டு வாங்கு.” என்று கூறினார். ஆரம்பத்தில் ஒரு சிறிய குடிசை, ஒரு கிணறு, எளிய வாழ்க்கை, கடுமையான தவம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு வளரத் தொடங்கிய ரமணபாதம், பின்னாளில் சுவாமி ரமணகிரி ஆசிரமமாக ஆன்மீகப் பணியை விரிவுபடுத்தியது.
சுவாமி ரமணகிரி அவர்கள் தமது 34வது வயதில் மகாசமாதி அடைந்தார்கள். அவருடைய இறுதி வார்த்தைகளாக: “Let me go”என்று கூறினார்கள், பகவான் ரமண மகரிஷி தமது கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போன்ற ஆன்மீகக் காட்சியை அவர் அனுபவித்ததாகவும், கூறப்படுகிறது.
பூஜை, ஜபம், யோகம், தியானம், தர்மம் ஆகிய ஆன்மீகப் பயிற்சிகளின் மூலம் அந்த ஞானத்தை மறைத்திருக்கும் தடைகள் படிப்படியாக விலகி, உள்ளிருக்கும் ஞானம் வெளிப்படத் தொடங்கும் என்பது சுவாமியவர்களின் உபதேசம்.


சுவாமி ரமணகிரி

bottom of page